பிஞ்சி ஏரியில் பொழுதுபோக்கு பூங்காவுடன் படகு சவாரி திட்டம்
ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் ரூ.45 கோடியில் பொழுதுபோக்கு பூங்காவுடன், படகு சவாரி ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியில் ரூ.45 கோடியில் பொழுதுபோக்கு பூங்காவுடன், படகு சவாரி ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள பிஞ்சி ஏரியை சீரமைத்து பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
பூங்காவுடன் படகு சவாரி
ராணிப்பேட்டை நகராட்சியின் மையப்பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிஞ்சி ஏரியை சீர்படுத்தி மக்கள் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தம் வகையில் மாற்றியமைக்கும் பணி நீண்டநாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது.
அந்த பணியை இந்த ஆண்டு கண்டிப்பாக முடித்தாக வேண்டும். இந்த ஏரிக்கு பொன்னை ஆற்று தண்ணீர் வருகிறது. தண்ணீர் வரும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று ஏரிக்கு 4 இடத்தில் இருந்து கழிவு நீர் வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதனை தடுத்து அந்த கழிவுநீரை மாற்றுப் பாதை அமைத்து தனியாக வெளியேற்ற திட்டம் தயார் படுத்த வேண்டும்.
பிஞ்சி ஏரியை சுற்றிலும் கரைகள் அமைத்து, நடைபாதைகள் அமைத்து, கரையை சுற்றி மரங்கள் நட்டு, புல்வெளிகள் அமைத்து ஒரு சிறந்த இயற்கை சூழலுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும். அதேபோன்று ஏரியில் அதிக அளவு தண்ணீர் தேக்கி படகு சவாரி செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏரியைச் சுற்றி ஆங்காங்கே நவீன கழிப்பறைகள் அமைத்திட வேண்டும். குழந்தைகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அம்சங்கள் அமைக்க வேண்டும். ஏரியை தூர்வாரி அதிக அளவு நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்ட அறிக்கை
இத்திட்டத்திற்கு ரூ.45 கோடி வரை செலவாகும் என தனியார் திட்ட மதிப்பீட்டாளர்கள் அறிக்கை அளித்துள்ளனர். இத்திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை செயல்படுத்தினால் கட்டாயம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
ஆகவே திட்ட அறிக்கையை தயார் செய்து வழங்கினால், தமிழக முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்று துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும். கலெக்டர் இதில் தனி கவனம் செலுத்தி இத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஜே.எல்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் முகமது கனி, ஜி.கே.உலகப் பள்ளி இயக்குனர் வினோத் காந்தி, நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ராணிப்பேட்டை தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய சங்கம், சிப்காட் தொழிற்சாலைகள் சங்க நிர்வாகிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story