அரூர் அருகே கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது


அரூர் அருகே  கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 11:43 PM IST (Updated: 5 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் என்கிற பிரதீப். இவர் கோவையில் மெக்கானிக்கல் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், மொரப்பூர் அருகே அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகள் சோனியா (வயது 21) என்பவருக்கும் 11 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சோனியா கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அரூர் உதவி கலெக்டர் முத்தையன் விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்யும் முன்பு சோனியா கணவன் பிரதீப்பிடம் செல்போனில் பேசியதும், குடும்ப பிரச்சினை மற்றும் பண தேவை குறித்து பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், இதனால் மனமுடைந்த கர்ப்பிணி சோனியா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்.

Next Story