தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் எல்லைக்குட்பட்ட நெடுவாசல் சாலை ஆருத்ரா பள்ளிக்கு வடபுறத்தில் பார்க்கவன் நகரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தெரு விளக்குகள் மற்றும் சாலை வசதிகள் ஏதும்இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குமாரவேலு, பார்க்கவன் நகர், பெரம்பலூர்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், குளித்தலை தந்தை பெரியார் காவிரி பாலத்தில் இருந்து முசிறி புதிய பஸ் நிலையம் வழியாக செல்லக்கூடிய சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட முசிறி மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைத்து அதன் மூலம் அப்பகுதியில் மின்சார வினியோகம் செய்கின்றனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த முசிறி மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சுந்தர், குளித்தலை, கரூர்.
அசுத்தமாகும் விளையாட்டு மைதானம்
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி 2-வது வார்டில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் அசுத்தம் செய்வதாலும், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாலும் அசுத்தமாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டு மைதானத்தில் சிறுவர்- சிறுமிகள், வாலிபர்கள் விளையாட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆறுமுகம், புஞ்சை தோட்டக்குறிச்சி, கரூர்.
தெருநாய்களால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி, ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டி, தேத்தாம்பட்டி, குறிஞ்சி நகர், அண்ணாமலை அவென்யூ ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அவ்வப்போது ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடுகப்பட்டி, புதுக்கோட்டை.
பராமரிக்கப்படாத பூங்கா
திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா எந்த பராமரிப்பும் இல்லாமல் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள மரங்கள் அவ்வப்போது முறிந்து நடைப்பயிற்சி செல்கிறவர்கள் மீதும், விளையாட வரும் சிறுவர்கள் மீதும் விழுகிறது. அதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து பல மாதங்களாக ஆபத்தான நிலையில் நிற்கிறது. பொதுமக்கள் நடை பயிற்சி செய்யும்போது இந்த மரம் அவர்கள் மீது விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ராஜாராம் சாலை, திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி ஸ்ரீரங்கம் 3-வது வார்டு கொள்ளிடம் சாலை வசந்தம் நகர் , சக்தி நகர் பகுதிகளில் மதில் சுவர் ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலசுப்பிரமணியம், கீழவாசல், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சூக்லாம்பட்டியிலிருந்து நாகநல்லூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சூக்லாம்பட்டி, திருச்சி.
திருச்சி மாவட்டம, ஸ்ரீரங்கம் தாலுகா, அந்தநல்லூர் ஒன்றியம், பெருகமணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், இப்பகுதி பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பழையூர், திருச்சி.
நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாய் மூகாம்பிகை நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், தாய் மூகாம்பிகை நகர், திருச்சி.
Related Tags :
Next Story