பராமரிப்பு இல்லாத புதர்மண்டிய பூங்காக்கள்


பராமரிப்பு இல்லாத புதர்மண்டிய பூங்காக்கள்
x
தினத்தந்தி 6 April 2022 12:40 AM IST (Updated: 6 April 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின்கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின்கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன.
பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள்
அதில் குறிப்பாக கே.கே.நகர் ராஜாராம் சாலையில் உள்ள சின்னச்சாமி பூங்கா, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூங்கா, தென்னூர் செல்லும் பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள், சாலையோர பூங்காக்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா கால கட்டத்திற்கு முன்புவரை அதிக அளவிலான பொதுமக்கள் இந்த பூங்காக்களை பயன்படுத்தி வந்தனர்.
பெரும்பாலும் மாநகர பகுதிகளில் பொழுது போக்கு அம்சங்கள் என்று எதுவும் இல்லாத நிலையில் இந்த பூங்காக்களுக்கு மாலை நேரங்களில் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் வந்து சென்றனர். மேலும் பணம் கொடுத்து உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லமுடியாத பல இளைஞர்கள் சாலையோர உடற்பயிற்சி கூடங்களுக்கு அணிவகுத்து வந்தனர். சாலைகளில் நடைபயிற்சி செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
செடிகள், குப்பைகள்
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க அரசு வலியுறுத்தியது. அதனால் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்கள், திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள் பூட்டப்பட்டன. அந்த வேளையில் பூங்காக்கள் சரியாகபராமரிக்கப்படாததால் அதிகமான செடிகள், குப்பைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி விட்டு தேவையில்லாத வீசியெறியும் பொருட்களால் சீர்கெட்டு போய் உள்ளது.
தீவைத்து எரிப்பு
குறிப்பாக ஆர்.எஸ்.புரத்தில் 2 பூங்காக்கள் உள்ளன. சுமார் ரூ.1½ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 2 பூங்காக்களும் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் இந்த 2 பூங்காக்களும் பராமரிப்பு இன்றி புதர் மண்டியது. மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த அளவு குப்பை கூளங்களை அகற்றி காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி சென்று வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பாம்புகள் தொல்லை இருந்தது. மேலும் பூங்காவில் காய்ந்து கிடந்த புற்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
பூங்காவில் ஆபத்தான மரம்
திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா எந்த பராமரிப்பும் இல்லாமல் பாழ்பட்டு கிடக்கிறது. இங்குள்ள மரங்கள் அவ்வப்போது முறிந்து நடைபயிற்சி செல்கிறவர்கள் மீதும், விளையாட வரும் சிறுவர்கள் மீதும் விழுகிறது. அதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து பல மாதங்களாக நிற்கிறது. பலர் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கருவிகள் உடைந்து கவனிப்பார் இல்லாமல் கிடக்கின்றன.
அவதி
இதுபோல், பல பூங்காக்களில் பூங்காவை சுற்றி நடைபயணம் மேற்கொள்ள பேவர்பிளாக் தளம் உள்ளது. பல மாதங்களாக பூங்கா பூட்டியே கிடந்ததால், நடைபாதைகள் புதர் மண்டி கிடக்கிறது. உபகரணங்கள் சேதமடைந்து அரசு நிதி வீணாகிறது. இதனால் குழந்தைகள், நடைபயிற்சி செல்வோர் அவதி அடைந்து வருகிறார்கள். விரைவில் கோடை விடுமுறை வேறு வந்துவிடும். அப்போது பொதுமக்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்க பூங்காக்களைதான் அதிகம் நாடுவார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் மாநகரில் உள்ள பூங்காக்களை சுத்தம் செய்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story