விவசாயி கொலையில் மேலும் ஒருவர் கைது


விவசாயி கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 6 April 2022 1:21 AM IST (Updated: 6 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் முத்துமாலை (வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இவருக்கும், உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த முருகன் (28), தருவை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துமாலை நடுவக்குறிச்சியில் உள்ள ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட 2 பேருக்கும், முத்துமாலைக்கும் இடையே மீண்டும் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட 2 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் முத்துமாலையை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் முத்துமாலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 2 பேரும் கத்தியுடன் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் முத்துமாலையின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மற்றொரு முருகன் (45) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி முருகனை நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால் நேற்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story