சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 1:32 AM IST (Updated: 6 April 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சொத்து வரி உயர்வை கண்டித்தும், ஜெயலலிதா தொடங்கிய திருமணத்திற்காக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியதை கண்டித்தும், அதனை மீண்டும் தொடர கோரியும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க கோரியும், அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவதை கண்டித்தும், அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அரணாரை ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் வரியை உயர்த்தியுள்ளனர். இனிவரும் காலத்தில் மின் கட்டணம் உயர்வு, பஸ் கட்டணத்தை உயர்த்துதல், பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை தி.மு.க அரசு கொடுக்க உள்ளது. தி.மு.க. அரசு பதவி ஏற்று ஓராண்டுக்குள் பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் எந்த திட்டமும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் அம்மா கிளினிக், அம்மா மருந்தகம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் என தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் கிளை அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story