ஏரிக்கரைகளில் கட்டப்பட்டிருந்த 124 வீடுகள் முழுமையாக இடிப்பு
ஏரிக்கரைகளில் கட்டப்பட்டிருந்த 124 வீடுகள் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரியலூர் நகரில் உள்ள குறிஞ்சி ஏரி, அரசு நிலை யிட்டான் ஏரி ஆகியவற்றின் கரைகளில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, ஏரிக்கரைகளில் கட்டப்பட்டிருந்த 124 வீடுகளை இடித்து அகற்றும் பணியை வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் இணைந்து நேற்று முன்தினம் ெதாடங்கினர். முதல்நாளில் குறிஞ்சி ஏரிக்கரையில் இருந்த 94 வீடுகள் இடிக்கப்பட்டன.
நேற்று அரசு நிலையிட்டான் ஏரிக்கரையில் இருந்த 30 வீடுகள் உள்பட மொத்தம் 124 வீடுகளும் முழுமையாக இடிக்கப்பட்டன. இதையொட்டி மின்சாரத்துறை, மருத்துவ துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறையினர் தயார் நிலையில் இருந்தனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்களை கொண்டு வீடுகளை இடித்தபோது அங்கு வசித்தவர்கள் கதறி அழுதனர். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஒரு தலைபட்சமான நடவடிக்கை
அந்த பகுதியில் வீடுகளை இழந்தவர்கள் கூறுகையில், நாங்கள் ஏரிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கரைகளில் வீடுகள் கட்டி வசித்து வந்தோம். தற்போது அதை இடித்து விட்டார்கள். நகரில் ஏரி, குளம், குட்டை மற்றும் பொது கிணறுகளை முழுவதுமாக ஆக்கிரமித்து அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டி உள்ளனர். அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை, கழிவு நீர் வாய்க்கால்கள் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சிலருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் நாங்கள் இருந்தது ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியாகும். நகரின் மையப்பகுதியில் நீர் ஆதார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை என்று கதறி அழுதவாறு கூறினார்கள்.
கல்வீசியதாக 5 பேர் கைது
அரியலூர் அரசு நிலையிட்டான் ஏரிக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது சிலர் கல் வீசியதில் பொக்லைன் எந்திர டிரைவரின் கையில் அடிபட்டது. அதை தடுக்க முயன்ற ஆனந்த்ராஜ் என்ற போலீஸ்காரருக்கும் அடிபட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கல் வீசிவிட்டு ஓடியவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முனியப்பர் தெருவை சேர்ந்த நவீன்குமார்(22), தினேஷ்குமார்(18), ராம்குமார்(24), சரவணன்(40) மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் அரியலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story