மீனவர் வலையில் சிக்கிய ரூ.25 லட்சம் கஞ்சா மூட்டைகள்
அதிராம்பட்டினம் அருகே மீனவர் விரித்த வலையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் சிக்கியது. அந்த கஞ்சா மூட்டைகளை கப்பற்றிய போலீசார், இலங்கைக்கு கடத்தி சென்றபோது அவை படகில் இருந்து தவறி விழுந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் அருகே மீனவர் விரித்த வலையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் சிக்கியது. அந்த கஞ்சா மூட்டைகளை கப்பற்றிய போலீசார், இலங்கைக்கு கடத்தி சென்றபோது அவை படகில் இருந்து தவறி விழுந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீனவர் விரித்த வலையில் சிக்கிய மூட்டைகள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரையை சேர்ந்தவர் சோமசுந்தரம். மீனவரான இவர், தனக்கு சொந்தமான படகில், சக மீனவர்களுடன் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
கடலில் இருந்து மூன்று பாகம் தொலைவில் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்தபோது அவரது வலையில் 5 சணல் சாக்கு மூட்டைகள் சிக்கியது. அதைப்பார்து சந்தேகம் அடைந்த மீனவர் சோமசுந்தரம், இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.
பிரித்து பார்த்தனர்
கடலோர காவல் படை அறிவுறுத்தலின் பேரில், அந்த மூட்டைகளை தனது படகில் ஏற்றிக்கொண்டு மீனவர் சோமசுந்தரம் கரைக்கு திரும்பினார்.
அங்கு நாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் சீனிவாசன், அதிராம்பட்டினம் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், ஏட்டு வெற்றிச்செல்வன் ஆகியோர், மீனவர்கள் படகில் ஏற்றி வந்த மூட்டையை கைப்பற்றி அதிராம்பட்டினம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரித்து பார்த்தனர்.
ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா
அப்போது அந்த 5 மூட்டைகளிலும் 84 பண்டல்களில் சுமார் 168 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கஞ்சா மூட்டைகள் கடலுக்குள் எவ்வாறு வந்தது? படகில் யாரேனும் கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்தி சென்றபோது இந்த 5 மூட்டைகளும் தவறி விழுந்ததா? அல்லது கடத்தி சென்றபோது கடலோர காவல் படை ரோந்து வந்ததை பார்த்து கடத்தல்காரர்கள் அந்த கஞ்சா மூட்டைகளை கடலுக்குள் போட்டு விட்டு சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் கடலோர காவல் படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story