மழைநீரில் மூழ்கி முதியவர் சாவு


மழைநீரில் மூழ்கி முதியவர் சாவு
x
தினத்தந்தி 6 April 2022 1:59 AM IST (Updated: 6 April 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறையில் சாலை விரிவாக்க பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.

திருவிடைமருதூர்;
ஆடுதுறையில் சாலை விரிவாக்க பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார். 
சாலை வரிவாக்க பணி
கும்பகோணம்‌ அருகே உள்ள ஆடுதுறை- மயிலாடுதுறை மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடுதுறை பெட்ரோல் பங்க் அருகில் சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. 
இந்த பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது.  அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது60). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு ஆடுதுறை பெட்ரோல் பங்க் அருகே சென்றார். அப்போது அவர் அங்கு இருந்த பெரிய பள்ளத்தில் தவறி விழுந்தார். இதனால் மழைநீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
சோகம்
இது குறித்து தகவல் அறிந்த  திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வராஜ் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பாதிக்கப்பட்ட செல்வராஜ் குடும்பத்துக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5000 வழங்கி ஆறுதல் கூறினார். சாலை விரிவாக்க பள்ளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story