“நெருக்கடியான நேரங்களில் மக்களை காப்பாற்றும் பொறுப்பு கோர்ட்டுக்கு உள்ளது”-நீதிபதிகள் கருத்து
கொரோனா காலத்தில் வாடகை செலுத்துவதில் விலக்கு அளித்ததற்கு எதிரான வழக்கில், நெருக்கடியான நேரங்களில் மக்களை காப்பாற்றும் பொறுப்பு கோர்ட்டுக்கு உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை,
கொரோனா காலத்தில் வாடகை செலுத்துவதில் விலக்கு அளித்ததற்கு எதிரான வழக்கில், நெருக்கடியான நேரங்களில் மக்களை காப்பாற்றும் பொறுப்பு கோர்ட்டுக்கு உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
வாடகை செலுத்த விலக்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கடைக்காரர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
ஆனால், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான வாடகைக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு தள்ளுபடி
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “கொரோனா ஊரடங்கு காரணமாக நாடே பல இன்னல்களை சந்தித்தது. நாடு முழுவதும் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த காலகட்டத்தில் மக்கள் பணம் சம்பாதிக்கவும், வெளியில் செல்ல முடியாத நிலையும் இருந்தது.
இதுபோன்ற நேரத்தில் அரசுதான், மக்களை காப்பாற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோர்ட்டுக்கு உரிமை உள்ளது” என்றனர்.
விசாரணை முடிவில், இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story