‘மேகதாது திட்டத்துக்கு உடனே அனுமதி தாருங்கள்’- மத்திய மந்திரியிடம் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தல்
டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி மனு கொடுத்தார்.
பெங்களூரு:
அனைத்துக்கட்சி கூட்டம்
கர்நாடக அரசு, ரூ.9 ஆயிரம் கோடியில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்த விவகாரம் குறித்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த மாதம்(மார்ச்) பெங்களூருவில் நடைபெற்றது. அதில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
டெல்லி சென்றார்
அதைத்தொடர்ந்து, மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதிலுக்கு தமிழக அரசை கண்டித்து கர்நாடக அரசு, சட்டசபையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்திப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சட்டசபையில் அறிவித்தார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் 1.55 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டெல்லி புறப்படும் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மேகதாது திட்டம்
நான் தற்போது டெல்லி செல்கிறேன். அங்கு பல்வேறு மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். நாளை(அதாவது இன்று) நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி) குறித்து பேச இருக்கிறேன். பெலகாவியில் சங்கொள்ளி ராயண்ணா பெயரில் ராணுவ பள்ளியை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்த பள்ளியின் நிர்வாகத்தை எடுத்து நடத்துமாறு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அந்த கோரிக்கையை ஏற்று அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மின்சாரத்துறை மந்திரியையும் சந்திக்க இருக்கிறேன். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேச உள்ளேன். அப்போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசித்து அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்க முடிவு செய்துள்ளேன். மேலும் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்குவது உள்பட கர்நாடகத்தில் உள்ள நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேச இருக்கிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
சந்திப்பு
இதையடுத்து நேற்று மாலையில் பசவராஜ் பொம்மை டெல்லி சென்றார். அங்கு மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, மேகதாது திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு பசவராஜ் பொம்மை கேட்டு கொண்டார்.
விரைவாக ஒப்புதல்
அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பசவராஜ் பொம்மை, ‘ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினேன். இதில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து விவாதித்தேன். முக்கியமாக மேகதாது திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு கேட்டு கொண்டேன். இதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார்’ என்றார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தொடர்ந்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கும் டெல்லி சென்றுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவும் டெல்லி சென்றுள்ளார். அவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-மந்திரி, பெங்களூரு திரும்பியதும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story