கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேல தெருவைச் சேர்ந்த பிரியா தேவர் மகன் கந்தசாமி (வயது 40). இவர் குடும்பத்தினர் 4 பேருக்கு சொந்தமான கூட்டு பட்டா நிலத்தில், தனது பங்குக்கு உள்ள நிலத்தில் கொய்யா, வாழை, தக்காளி பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். தற்போது கோடை காலத்தில் தண்ணீரை சேமித்து விவசாயம் செய்வதற்கு, சொட்டு நீர் பாசன வசதி செய்ய மானியம் பெற, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் 3 மாதத்திற்கு முன்பு மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு மானியம் பெறத் தேவையான சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தனக்கு அந்த சான்றிதழ் வழங்க கோரிக் தனது குடும்பத்தினருடன் நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார். தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் அவரை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கூட்டு பட்டா நிலத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எவ்வளவு என்று எழுதி வாங்கி, கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெற்று கொண்டு வருமாறும், அந்த பங்கு நிலம் 5 ஏக்கருக்குள் இருந்தால் சிறு, குறு விவசாயி சான்றிதழ் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனை தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை விவசாயி குடும்பத்தினர் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story