கவுன்சிலர்கள் வெளிநடப்பு


கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 6 April 2022 9:40 PM IST (Updated: 6 April 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருப்பூர், 
சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க, பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க. வெளிநடப்பு
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். சொத்துவரி உயர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 17 பேரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது மாமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது:-
பட்ஜெட் புத்தகம் கொடுத்து விட்டு உடனடியாக பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் பற்றி விவாதிக்க தெரிவிக்கப்படுகிறது. போதுமான நேரம் ஒதுக்க வேண்டும். சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தந்த மாநகராட்சி நிர்வாகம் சொத்துவரி உயர்வு குறித்து மாமன்றத்தின் ஒப்புதலின்படி முடிவு செய்யலாம் என்று உள்ளது. அதனால் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் சொத்துவரியை உயர்த்தக்கூடாது. மறுசீராய்வு கமிட்டி அமைக்க வேண்டும் என்று பேசினார். ஆனால் மேயர் தினேஷ்குமார், ‘பட்ஜெட் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும். அதற்கு தனியாக நேரம் ஒதுக்கப்படும். சொத்துவரி உயர்வு தொடர்பாக தனியாக கூட்டம் நடத்தப்படும்’ என்றார்.
மறுசீராய்வு கமிட்டி
தொடர்ந்து கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசினார். இதற்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பட்ஜெட்டை பற்றி மட்டுமே பேச வேண்டும் மற்ற கவுன்சிலர்கள் என்றார்கள். இதைத்தொடர்ந்து சொத்துவரி உயர்வை அறிவித்த தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அன்பகம் திருப்பதி அறிவிக்க, அவருடைய தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாமன்றத்தில் இருந்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அன்பகம் திருப்பதி கூறும்போது, ‘பட்ஜெட்டில் குறைகளை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் கடந்த 1998-ம் ஆண்டு, 2008-ம் ஆண்டு சொத்துவரி உயர்வு செய்யப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி நடந்த கடந்த 10 ஆண்டுகளில் சொத்துவரி உயர்வு செய்யப்படவில்லை. சொத்துவரி உயர்வு குறித்து சீராய்வு கமிட்டி அமைக்க வேண்டும். அனைத்து மாமன்ற கவுன்சிலர்கள், அதிகாரிகள், தொழில்துறையினரை உள்ளடக்கி கமிட்டி அமைத்து வரியினங்களை முறைப்படுத்த வேண்டும். குப்பை வரியை நிறுத்தி வைத்து சொத்துவரியை வசூலிக்க வேண்டும் என்று மேயரிடம் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்தும் உரிய பதில் இல்லை. வரியினங்களை  செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு அதிகாரிகள் துண்டிப்பு செய்கின்றனர். கோடைகாலமாக இருப்பதால் இந்த நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அவகாசம் வழங்க வேண்டும்.  இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். மாநகராட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியாக செயல்படுவோம். 
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா வெளிநடப்பு
இதேபோல் பா.ஜனதா கவுன்சிலர்கள் காடேஸ்வரா தங்கராஜ், குணசேகரன் ஆகியோரும் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதாகைகளை ஏந்தியபடி மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Next Story