மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மன்னார்குடி:-
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பங்குனி திருவிழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக பரவாசுதேவ பெருமாளும், உற்சவராக ராஜகோபாலசாமியும் அருள்பாலித்து வருகிறார்கள். செங்கமலத்தாயார், செண்பகலட்சுமி ஆகிய பெயர்களில் தாயார் அருள்பாலித்து வருகிறார்.
பழமையான வைணவ தலங்களுள் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெறும் வெண்ணெய் தாழி உற்சவம் பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
அதைத்தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் ராஜகோபாலசாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் வெண்ணெய் தாழி உற்சவம் நடந்தது. அப்போது கையில் வெண்ணெய் குடத்துடன் தவழும் குழந்தை போல நவநீதசேவை அலங்காரத்தில் பல்லக்கில் வீதி உலா சென்ற ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் வீசி வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் நேற்று மதியம் நடந்தது.
வடம்பிடித்தனர்
இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாமா, ருக்மணி சமேதராக ராஜகோபாலசாமி எழுந்தருளினார். இதையடுத்து தேர் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்தது. பின்னர் நிலையை அடைந்தது. இந்த தேரோட்டத்தில் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Related Tags :
Next Story