1½ வயது ஆண் குழந்தை மர்ம சாவு


1½ வயது ஆண் குழந்தை மர்ம சாவு
x
தினத்தந்தி 6 April 2022 9:58 PM IST (Updated: 6 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே 1½ வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே 1½ வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1½ வயது குழந்தை
மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி கோவில்விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). கொத்தனாரான இவருடைய மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர்.
வழக்கம்போல் ஜெகதீஷ் காலையில் வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு கார்த்திகா குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மகன் சரணை பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் கார்த்திகா விட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து உறவினர் மீண்டும் குழந்தையை தாய் கார்த்திகாவிடம் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து சரண், சஞ்சனாவுடன் விளையாடி கொண்டிருந்தான்.
திடீர் சாவு
இந்தநிலையில் மகன் சரணின் உடல்நிலை சரியில்லை என வேலைக்கு சென்ற கணவர் ஜெகதீஷை தொடர்பு கொண்டு கார்த்திகா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவர் வீட்டுக்கு ஓடி வந்தார். அப்போது மயங்கிய நிலையில் இருந்த மகன் சரணை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். 
அங்கு பரிசோதித்த டாக்டர், குழந்தை சரண் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். 
போலீஸ் விசாரணை
பின்னர் குழந்தை சரணை வீட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது சரணின் கைவிரலில் அசைவு இருந்ததாக சிலர் தெரிவித்தனர். உடனே மார்த்தாண்டத்தில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டரும், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த பரபரப்பு சம்பவம் மார்த்தாண்டம் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சாவில் சந்தேகம்
அப்போது குழந்தையின் சாவில் மர்மம் உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது விஷப்பொடி பாக்கெட் கார்த்திகா வீட்டில் கிடந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது, வீட்டுக்குள் கிடந்த விஷப்பொடியை தின்பண்டம் என நினைத்து குழந்தை சாப்பிட்டிருக்கலாம், இதனால் குழந்தை இறந்திருக்கலாம் என கார்த்திகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் குழந்தையின் சாவில் மர்மம் இருந்ததால் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் குழந்தையின் சாவில் உள்ள மர்மம் முடிவுக்கு வரும் என போலீசார் தெரிவித்தனர். தின்பண்டம் என நினைத்து தவறுதலாக விஷப்பொடியை சாப்பிட்டதால் குழந்தை இறந்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story