மோடியுடன் சரத்பவார் சந்திப்பு- பின்னணி பற்றி பரபரப்பு தகவல்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 6 April 2022 11:00 PM IST (Updated: 6 April 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை சரத்பவார் சந்தித்து பேசியது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை, 
மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
கூட்டணி தலைவர்கள் மீது நடவடிக்கை
இந்த கூட்டணி கட்சித்தலைவர்கள் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், சில நில பேரங்கள் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி மற்றும் அவரது 2 கூட்டாளிகளின் ரூ.11.15 கோடி சொத்துகளை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் முடக்கி உள்ளது.
 இதே போன்று மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரியுமான அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் இருந்த அவரை சி.பி.ஐ. நேற்று தனது காவலில் எடுத்துள்ளது. இதுபோன்ற மேலும் சில ஆளும் கூட்டணி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. 
இந்த நடவடிக்கைகள், மராட்டிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. 
மோடியுடன் பவார் சந்திப்பு
இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று காலையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பின்னணி என்ன?
இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி சரத்பவாரின் சகோதரர் மகனும், மராட்டிய துணை முதல்-மந்திரியுமான அஜித் பவாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:-
 நாட்டின் பிரதமரும், ஒரு கட்சியின் தேசியத்தலைவரும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக சந்திக்கலாம். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சில பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டியதிருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.
எங்கள் கூட்டணி தலைவர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறதே என கேட்கிறீர்கள். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. 
கவர்னர் மீது புகார்
 அதேவேளையில் 12 எம்.எல்.சி.க்களை நியமிக்கக்கோரி நாங்கள் கவர்னரை பல முறை கேட்டு கொண்டோம். ஆனால் கவர்னர் மவுனம் சாதித்து வருகிறார். இந்த பிரச்சினை தொடர்பாகவும் பிரதமரை சரத்பவார் சந்தித்து இருக்கலாம். 
இவ்வாறு அஜித்பவார் கூறினார். 
 தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “மாநில மந்திரி சபை பரிந்துரையை ஏற்று 12 எம்.எல்.சி.க்களை கவர்னர் நியமிக்காத விவகாரத்தை உயர்மட்ட கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு சரத்பவாரிடம் நாங்கள் கூறியிருந்தோம். அதுபற்றி அவர் பிரதமரிடம் புகார் அளித்து இருக்கலாம்” என்றார். 
சரத் பவார் தகவல்
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு சரத்பவார், டெல்லியில் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “சஞ்சய் ராவத் மீது என்ன அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? இது அநீதி. ராவத் மீது நடவடிக்கை எடுக்க என்ன தூண்டுதல்? ஏனென்றால் அவர் சில கருத்துகளை வெளியிடுகிறார்” என தெரிவித்தார்.

Next Story