நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சியில் சிறுவன் பலியான சம்பவம்: குண்டு ரகத்தின் ஆய்வறிக்கை வர தாமதம் ஏன்? திருச்சி சரக டி.ஐ.ஜி. பேட்டி


நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சியில் சிறுவன் பலியான சம்பவம்: குண்டு ரகத்தின் ஆய்வறிக்கை வர தாமதம் ஏன்? திருச்சி சரக டி.ஐ.ஜி. பேட்டி
x
தினத்தந்தி 6 April 2022 11:27 PM IST (Updated: 6 April 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

குண்டு ரகத்தின் ஆய்வறிக்கை வர தாமதம் ஏன்? குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பேட்டி அளித்தார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன், ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய போலீஸ் நிலையங்களில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் இன்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆய்வுக்கு பின் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறுகையில், டி.ஜி.பி. உத்தரவின்படி நடந்த சோதனையில் திருச்சி சரகத்தில் இதுவரை 25 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி சரகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சப்-டிவிஷன் வாரியாக குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 19 தனிப்படை உள்ளது. பஸ், ரெயில் நிலையங்கள், கடற்கரையோர பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க கண்காணிக்கப்படுகிறது. நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து சிறுவன் பலியான சம்பவத்தில் ஆய்வறிக்கை வர தாமதமாகி உள்ளது. ஆய்வறிக்கை வர தாமதமாக காரணம் அங்கு தமிழகம் முழுவதும் உள்ள துப்பாக்கி தொடர்பான வழக்குகள் பதிவானதில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வழக்குகளின் வரிசைப்படி நார்த்தாமலை சம்பவத்தில் குண்டு ரகம் ஆய்வு செய்யப்படும். இதற்காக அன்றைய தினம் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் துப்பாக்கிகள் மொத்தம் 52 எண்ணிக்கையில் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு ரகம் ஆராய்ந்த பின், அது எந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்தது என்பது கண்டறியப்படும். அதன்பின் தான் அந்த துப்பாக்கியை பயன்படுத்தியவர் யார்? என்பது விசாரணையில் தெரியவரும். அதனால் ஆய்வறிக்கை வந்த பிறகு தான் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள முடியும். இலங்கையில் தற்போதைய சூழலில் அங்கிருந்து கடல் மார்க்கமாக புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிக்கு யாரேனும் வருகிறார்களா? என கடலோர காவல் படையினர், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story