கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கொண்டலாம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கல்லூரி வாசல் முன்பு நின்று நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்திய மாணவர்கள் சங்கத்தின் மாநகர செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்றது. சுமார் 1½ மணி நேரமாக இந்த போராட்டம் நீடித்ததால் இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு வந்து மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கூறும் போது, ‘தற்போது வரை மாணவ-மாணவிகள் என இருபாலர் படித்துவரும் கல்லூரியாக இந்த கல்லூரி இருந்து வருகிறது. இதனை கல்லூரி நிர்வாகம் மகளிர் கல்லூரியாக மாற்ற ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் எதிர் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் இந்த கல்லூரியில் சேரமுடியாது என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்கள். இந்த நிலையில் போராட்டத்தை கைவிடும்படி போலீசார் வலியுறுத்தியதன் பேரில் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். இந்த நிலையில் மாணவர்களது கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்காவிட்டால் இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாணவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
Related Tags :
Next Story