கார்கள் மோதல்; கணவன்-மனைவி பலி


கார்கள் மோதல்; கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 7 April 2022 1:56 AM IST (Updated: 7 April 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே ரோட்டின் வளைவில் திரும்பும் போது 2 கார்கள் திடீரென்று மோதிக் கொண்டதால் கணவன்-மனைவி 2 பேரும் பலியானார்கள். மேலும் காரில் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் அருகே ரோட்டின் வளைவில் திரும்பும் போது 2 கார்கள் திடீரென்று மோதிக் கொண்டதால் கணவன்-மனைவி 2 பேரும் பலியானார்கள். மேலும் காரில் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாமி கும்பிட சென்றனர்

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது 50). இவருடைய மனைவி விஜயா (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குன்னூரில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு காரில் புறப்பட்டுச் சென்றனர். அதே காரில் ராஜரத்தினத்தின் மைத்துனர் மனைவி ஜோதிலட்சுமியும்(30) சென்றார்.
திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு விட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். காரை ராஜரத்தினத்தின் நண்பர் சிவக்குமார் ஓட்டி வந்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் மிசிரியோர் கூட்டுறவு நூற்பாலை அருகே நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. 
அப்போது திருமங்கலத்தை சேர்ந்த கவுரி சங்கர்(23) என்பவர் மற்றொரு காரில் திருமங்கலத்தில் இருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

2 கார்கள் மோதல்

இந்தநிலையில் ராஜரத்தினம் வந்த கார் மதுரைக்கு செல்வதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக கவுரிசங்கர் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு ராஜரத்தினம், அவரது மனைவி விஜயா படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார்கள். ஜோதிலட்சுமி, கார் டிரைவர் சிவக்குமார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தில் கவுரிசங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் ்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பதி பலி

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ராஜரத்தினம், விஜயா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.. ஜோதிலட்சுமி, சிவக்குமார் ஆகிய 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இந்தப் பகுதியில் அடிக்கடி தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இப்பகுதியில் வேகத்தடை மற்றும் சிக்னல் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story