உருது மொழி தெரியாததால் தமிழக வாலிபர் கொலை: மந்திரி அரக ஞானேந்திராவின் சர்ச்சை கருத்தால் பரபரப்பு


உருது மொழி தெரியாததால் தமிழக வாலிபர் கொலை: மந்திரி அரக ஞானேந்திராவின் சர்ச்சை கருத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2022 3:07 AM IST (Updated: 7 April 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் உருது மொழி தெரியாததால் தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டதாக மந்திரி அரக ஞானேந்திரா சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்தை திரும்ப பெறுவதாக அவர் டுவிட்டர் பதிவு மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

தமிழக வாலிபர் கொலை

  பெங்களூரு காட்டன் பேட்டை அருகே ஜெய்மதிநகரில் வசித்து வந்தவர் சந்துரு(வயது 22). இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவர் பெங்களூருவில் தனது பாட்டியுடன் வசித்து வந்தார். கடந்த 4-ந் தேதி இரவு ஜே.ஜே.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து சந்துரு படுகொலை செய்யப்பட்டார். அதாவது கடந்த 4-ந் தேதி அதிகாலை 2 மணியளவில் சந்துரு என்பவரை 3 பேர் கத்தியால் குத்தி இருந்தனர். சந்துரு தனது நண்பரான சைமன்ராஜ் என்பவருடன் பழைய குட்டதஹள்ளிக்கு சிக்கன் சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.

  அங்கு சிக்கன் கடை இல்லாததால் வேறு கடைக்கு செல்ல 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் தான் சந்துருவின் மோட்டார் சைக்கிள், சாகித் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி இருந்தது.மோட்டார் சைக்கிள் மோதல் காரணமாக சாகித்திற்கும், சந்துருவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

3 பேர் கைது

  அப்போது சாகித் தனது கூட்டாளிகள் 2 பேரை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் சாகித், தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து சந்துருவை கத்தியால் குத்தி இருக்கிறார். இதில், அவரது தொடையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. விக்டோரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த சந்துரு உயிர் இழந்திருந்தார். இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகித், அவரது கூட்டாளிகள் 2 பேர் என 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

  இந்த நிலையில், சந்துரு கொலை குறித்து பெங்களூருவில் நேற்று காலையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

உருது மொழி தெரியாததால்...

  கொலை செய்யப்பட்ட சந்துரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு கன்னடம் தவிர வேறு மொழி தெரியாததால் கொலை நடந்திருக்கிறது. குறிப்பாக உருது மொழி தெரியாததால் சந்துரு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

  சந்துரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தால் சர்ச்சை

  இதற்கிடையில், சந்துரு குறித்து நேற்று காலையில் போலீஸ் அதிகாரிகள், மந்திரி அரக ஞானேந்திராவுக்கு உரிய தகவல்களை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சந்துரு கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிவித்திருந்தனர். ஆனால் சந்துருவுக்கு உருது மொழி தெரியாததால் தான் கொலை செய்யப்பட்டு இருப்பதாக மந்திரி அரக ஞானேந்திராவே கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரக ஞானேந்திராவின் கருத்தால் சந்துரு கொலை விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  மந்திரி அரக ஞானேந்திராவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை. ஹர்ஷா கொலை வழக்கிலும், மைசூருவில் நடந்த கற்பழிப்பு வழக்கிலும் இதுபோன்று சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். இவர் நமக்கு போலீஸ் மந்திரியாக கிடைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என்று சித்தராமையா கூறி இருக்கிறார்.

மந்திரி விளக்கம்

  அதேபோல், ‘சந்துரு கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிகள் ஒரு தகவலை தெரிவிக்கிறார்கள். மந்திரி அரக ஞானேந்திரா மற்றொரு தகவலை தெரிவிக்கிறார். கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக மந்திரி அரக ஞானேந்திரா பேசி வருகிறார். சந்துரு கொலையையும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவிடுவார்களா?’ என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

  தான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் சுதாரித்து கொண்ட மந்திரி அரக ஞானேந்திரா தனது கருத்தை திரும்ப பெறுவதாக டுவிட்டர் மூலமாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது உருது மொழி தெரியாததால் சந்துரு கொலை செய்யப்படவில்லை என்றும், மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட தகராறில் சந்துரு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
  
மோட்டார் சைக்கிள் மோதியதே கொலைக்கு காரணம்

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சந்துரு கொலை வழக்கில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்களது பின்னணி குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் சந்துருவுக்கு உருது மொழி தெரியாததால், அவரை சாகித் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாக மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்த கருத்து பற்றி, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பதிலளிக்க மறுத்து விட்டார்.

சந்துருவின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்

சந்துரு கொலை குறித்து ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டை சேர்ந்த சந்துரு, தனது பாட்டியுடன் தான் வளர்ந்து வந்தார். சந்துருவின் பாட்டி நடைபாதையில் காய்கறி விற்று வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொலையான சந்துருவின் குடும்பத்திற்கு எனது சொந்த செலவில் ரூ.2 லட்சம் வழங்குவேன்’’ என்றார். அதே நேரத்தில் சந்துருவின் குடும்பத்தினரை சந்தித்து ஜமீர் அகமதுகான் ஆறுதல் கூறியதுடன், ரூ.2 லட்சத்தை வழங்கினார்.

Next Story