அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அவதி
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என பல தரப்பட்ட மக்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரெயில் நிலையம், அத்தியாவசிய பொருட்கள் வாங்க 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடம்பத்தூருக்கு செல்ல வேண்டும். மாற்று பாதையான தண்டலம்- கடம்பத்தூர் இடையே கூவம் ஆற்றில் இறங்கி் செல்ல வேண்டும். மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த ஆற்றை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அனைவரும் 8 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டு சென்று வருகிறார்கள்.
இந்த பகுதி மக்களுக்கு முறையான சாலை வசதி, பஸ் வசதி இல்லாததால் அவதியுற்று வருகிறார்கள்.
உண்ணாவிரத போராட்டம்
கடம்பத்தூர் முதல் தண்டலம் இடையே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டி தரவேண்டும் என தண்டலம், நுங்கம்பாக்கம், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், வெள்ளேரிதாங்கல், கொப்பூர், பாப்பரம்பாக்கம், புதுவள்ளூர், இலுப்பூர், வலசைவெட்டிக்காடு, போளிவாக்கம் ஆகிய 11 ஊராட்சி மூலமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக தண்டலம் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் மற்றும் சாலை வசதி, பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அனைத்திந்திய கை பூ வேலை எம்பிராய்டரி கூலி தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆதித்யா தலைமையில், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏழுமலை, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் சந்திரன், மாநில செயலாளர் லீலாவதி, பெண்ணுரிமை இயக்கத் தலைவர் கமலா மற்றும் தண்டலம் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் தண்டலம் கடம்பத்தூர் இடையே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டி தரவேண்டும், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், வெங்கடேசன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு விட்டு ஒரு மணி அளவில் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story