மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை வணிக ஆய்வாளர் கைது
மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
மின் இணைப்பு கோரி...
சென்னை மாதவரத்தை அடுத்த மூலக்கடையை சேர்ந்த கம்ப்யூட்டர் உதிரிபாகங்களுக்கான விற்பனையாளர் இந்திரஜித் குஷ்வாகா (வயது 26). உத்தரபிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பாப்பன்குப்பம் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டு மனையில் புதிய வீடு கட்ட முடிவு செய்து அதற்கான மின் இணைப்பு கோரி கடந்த மாதம் 30-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் இருந்தவாறு ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
ஆன்லைனில் பதிவு செய்யும்போது, அங்கு இருந்தவர்கள் கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையத்தில் வேலை செய்து வரும் மின்துறை வணிக ஆய்வாளர் ஜெகன் (45) என்பவரின் செல்போன் எண்ணை இந்திரஜித் குஷ்வாகாவிடம் கொடுத்து பேச சொல்லி உள்ளனர்.
ரூ.13 ஆயிரம் லஞ்சம்
இதனையடுத்து அவர் மின்துறை அதிகாரி ஜெகனிடம் பேசும்போது புதிய மின் இணைப்புக்கு லஞ்சமாக ரூ.15 ஆயிரத்தை அவர் கேட்டு உள்ளார். இதற்கு இந்திரஜித் குஷ்வாகா மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும் மின் இணைப்பு தர வேண்டிய வீட்டுமனையையும் நேரில் ஆய்வு செய்த அவர் கடைசியாக ரூ.13 ஆயிரத்தை லஞ்சமாக தருமாறு பேரம் பேசி முடித்து உள்ளார்.
மின் இணைப்புக்கு லஞ்சம் தர விரும்பாத இந்திரஜித் குஷ்வாகா இது குறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கும்மிடிப்பூண்டி பஜாரில் வைத்து மின் துறை வணிக ஆய்வாளர் ஜெகனிடம் இந்திரஜித் குஷ்வாகா ரசாயனம் தடவிய ரூ.13 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பானர் (பொறுப்பு) கலைசெல்வம் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா மற்றும் போலீசார் மின்துறை வணிக ஆய்வாளர் ஜெகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story