குப்பைகளை தீவைத்து எரிப்பதால் புகைமூட்டம்
திட்டச்சேரி-நாகூர் மெயின் சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி-நாகூர் மெயின் சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திட்டச்சேரியில் நாகை செல்லும் மெயின் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, திருப்புகலூர், புத்தகரம், திருக்கண்ணபுரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் நாகையில் உள்ள பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பனங்குடி பிராவடையான் ஆற்றுப்பாலம் அருகில் சாலையோரத்தில் திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதி குப்பைமேடு போல் காட்சி அளிக்கிறது.
எரிப்பதால் புகைமூட்டம்
குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கைப்பிடித்தபடி செல்கின்றனர். இந்த குப்பைகளை அடிக்கடி தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுகிறது.
இந்த புகை மூட்டதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகிறது.
நடவடிக்கை
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story