மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நாகையில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
நாகப்பட்டினம்:
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நாகையில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
பேச்சுப்போட்டி
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, நாகை நடராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளியில் வருகிற 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
பரிசுகள் வழங்கப்படும்
கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டிக்கு முன்பாக, பள்ளி, கல்லூரிகளில் முதல் கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களை தேர்வு செய்து, மாவட்ட போட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பட்டியலை வரும் 13-ந் தேதிக்குள்(புதன்கிழமை) அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story