நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு. அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம்


நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு. அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 7 April 2022 10:13 PM IST (Updated: 7 April 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

வேலூர் சதுப்பேரி ஏரி உபரிநீர் கால்வாய் வழியாக சென்று நிக்கல்சன் கால்வாயில் கலந்து பாலாற்றுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சதுப்பேரி ஏரி உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்து 150 வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை இடித்து அகற்றும் பணியில்  வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றையும் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் அதிகாரிகளிடம் வீடுகளை அகற்றக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிக்கல்சன் கால்வாய் அருகே உள்ள வீடுகள் முழுமையாக இடித்து அகற்றப்படவில்லை. சிலர் கால்வாய் இடத்தை ஆக்கிரமித்து கழிவறை, வீட்டின் சுற்றுச்சுவர் கட்டி உள்ளனர். அவற்றை மட்டுமே முறையாக அளவீடு செய்த பின்னர் இடித்து அகற்ற உள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் நிக்கல்சன் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து வரைபடம் மூலம் அளவீடு செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் காய்வாய் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. நிக்கல்சன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இடித்து அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாங்காய்மண்டி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story