விராலிமலை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்
விராலிமலை அருகே கவுண்டம்பட்டிக்குள் பஸ் வராததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவூர்:
சாலை சீரமைக்கும் பணி
விராலிமலை தாலுகா, கத்தலூர் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி கிராமத்திற்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் ஒன்று காலை மாலை ஆகிய இருவேளை வந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் மூலம் செவந்தியாணிபட்டி, கவுண்டம்பட்டி, வேடம்பட்டி, கத்தலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாத்திமாநகர், அளுந்தூர், நாகமங்கலம், நசரேத் ஆகிய பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கும், பொதுமக்கள் திருச்சிக்கு வேலைக்கு செல்வதற்கும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
கோரிக்கை மனு
இதில் செவந்தியாணிபட்டியிலிருந்து கவுண்டம்பட்டி வரை இன்னும் சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் கவுண்டம்பட்டி வரை வந்து செல்ல வேண்டிய அரசு பஸ் செவந்தியாணிபட்டி வரை வந்து செல்கிறது. இந்நிலையில் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கவுண்டம்பட்டி, வேடம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து செவந்தியாணிபட்டி சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து கத்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி மற்றும் பொதுமக்கள் சிலர் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கவுண்டம்பட்டி சாலை பணி முடிவடையும் வரை அதே தூரத்திலுள்ள வேடம்பட்டி வழியாக கவுண்டம்பட்டிக்கு மாற்று பாதையில் அரசு பஸ்சை இயக்குமாறு இரண்டு முறை கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் நேற்று வரை கவுண்டம்பட்டிக்கு பஸ் வரவில்லை.
பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் செவந்தியாணிபட்டி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து கவுண்டம்பட்டிக்கு பஸ்சை இயக்குமாறு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த கத்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி மற்றும் பொதுமக்களிடம் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவுண்டம்பட்டிக்கு பஸ்சை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்த அரசு பஸ்சை விடுவித்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நேற்று அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story