17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை  புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 April 2022 11:15 PM IST (Updated: 7 April 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை:
சிறுமி கடத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 26) இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும், திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்து கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி வீட்டிற்கு தெரியாமல் சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
இந்தநிலையில் சிறுமியின் தந்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிறுமியையும் கடத்தி சென்ற விஜய்யை தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் சென்னை படப்பை அருகே இருப்பதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சென்னை சென்று சிறுமியை மீட்டனர். பின் விஜய்யை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 
7 ஆண்டு சிறை 
வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக விஜய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையும், போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்து இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார். 
இந்த வழக்கில் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனையான 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

Next Story