மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா


மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 7 April 2022 11:29 PM IST (Updated: 7 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி பகுதி மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஊத்துக்குளி
ஊத்துக்குளி பகுதி மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
கோவில் விழா
ஊத்துக்குளி பகுதி மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஊத்துக்குளி பகுதி மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனோ தொற்றின் காரணமாக கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் தமிழகத்தில் நீக்கப்பட்ட நிலையில்  ஊத்துக்குளி பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
 ஊத்துக்குளி ஆர்.எஸ், நல்லா கவுண்டம்பாளையம், தென்முகம் காங்கேயம்பாளையம், செல்லிபாளையம் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். இப்பகுதி கோவில்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சாட்டு மற்றும் கம்பம் நடு விழா நடைபெற்றது. ஊத்துக்குளி ஆர்.எஸ் மகாமாரியம்மன் கோவிலில் கடந்த 5-ந் தேதி காலை தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
மாவிளக்கு பூஜை
அதனைத் தொடர்ந்து நேற்று காலை மாவிளக்கு பூஜையும் மாலை கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக அழகு குத்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கம்பம் எடுத்து கங்கையில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் பொங்கல் பூஜையும் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. 
இப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றதால் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி தனது குடும்பத்தினருடன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Next Story