சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 21 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாந்தி, மயக்கம்
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்த கள்ளராதினிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று பள்ளிக்கூடத்திற்கு 63 மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். இவர்களுக்கு நேற்று முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. இந்த மதிய உணவை 62 மாணவ, மாணவிகள் சாப்பிட்டனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 15 மாணவிகளும் மற்றும் 6 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவர்கள் 21 பேரையும் மீட்டு கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களுக்கு வட்டார மருத்துவர் பார்த்தசாரதி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
பரிசோதனை
இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புச்செல்வி, வட்டாட்சியர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களிடம் விசாரித்தனர்.
மேலும் அந்த உணவு மாதிரியை உணவு கட்டுப்பாட்டு அதிகாரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை பார்வையிட்டு நலம் விசாரித்தார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பரபரப்பு
இதுதொடர்பாக கலெக்டர் கூறியதாவது:-
கள்ளராதினிப்பட்டி பள்ளியில் நேற்று சத்துணவு சாப்பிட்ட 62 குழந்தைகளில் 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அனைவரும் நலமாக உள்ளனர். மேலும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மற்றவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. உணவில் வேறு ஏதும் கலந்துள்ளதா என்பதை அறிய அதை சோதனை செய்ய சுகாதார துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கீழப்பூங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கூடி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story