சேலைகள் திருடிய பெண் கைது
பண்ருட்டி ஜவுளிக்கடையில் சேலைகள் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அன்னை இந்திரா காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மதியம் 3 பெண்கள் வந்தனர். பின்னர் அவர்கள் ஏராளமான சேலைகளை பார்த்துவிட்டு, தங்களுக்கு கலர் பிடிக்கவில்லை என கூறி சென்றனர். இதையடுத்து கடை ஊழியர் சேலைகளை சரிபார்த்தபோது, 8 சேலைகளை காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அந்த பெண்களை பிடித்து விசாரிக்க சென்றபோது, ஒரு பெண் மட்டும் சிக்கினார். மற்ற பெண்கள் 2 பேர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். அதைத்தொடர்ந்து பிடிபட்ட பெண் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பிடிபட்ட பெண்ணை போலீசார் சோதனையிட்டு, விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், பரங்கிப்பேட்டை மீனவர் தெருவை சேர்ந்த செல்வம் மனைவி தமிழ்(வயது 55) என்பதும், அவர் அணிந்திருந்த ஆடைக்குள் 8 சேலைகளை திருடி மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழை போலீசார் கைது செய்ததோடு, தலைமறைவான 2 பெண்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். கடையில் ஜவுளி வாங்குவதுபோல் நடித்து 3 பெண்கள் சேலைகள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story