குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவன்-சூளகிரி அருகே பயங்கரம்
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி:
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கணவருடன் தகராறு
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா லால் பகதூர் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற அப்புகான் (வயது 60). இவருடைய மனைவி சவுதம்மா (50). மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் கணவரை பிரிந்த சவுதம்மா கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா காமன்தொட்டி அருகே உள்ள கோபசந்திரத்தில் தங்கி, அருகில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி சவுதம்மா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணி தனது மனைவியை மாலூருக்கு வருமாறு அழைத்தார். ஏற்கனவே வாழ்ந்த காலத்தில் தன்னை கொடுமைப்படுத்திய கணவருடன் இனியும் வாழ வேண்டாம் என முடிவு செய்த சவுதம்மா, நான் வர மாட்டேன் என தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சவுதம்மாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகி உயிருக்கு போராடிய சவுதம்மாவை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது
இது தொடர்பாக தோட்ட உரிமையாளர் ஜெயசங்கர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மணி என்கிற அப்புகான் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story