தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 April 2022 12:17 AM IST (Updated: 8 April 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்களால் அச்சம் 
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் சிறுவர்- சிறுமிகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வேலூர், பெரம்பலூர்.

கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் பணி 
கரூர் உழவர் சந்தை பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் புதிதாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிகண்டன், கரூர்.

பன்றிகளால் தொல்லை 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி, சந்தைப்பேட்டை அண்ணாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் கவர்களுடன்  கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் இப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் வெயில் நேரத்தில் படுத்துக்கொண்டு அசுத்தம் ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சந்தைப்பேட்டை, புதுக்கோட்டை.

குடிநீர் வால்வுகள் சரிசெய்யப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையம் மூலமாக எண்ணற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த காவிரி கூட்டு குடிநீர் செல்லும் வழியில் உள்ள தொட்டிகளில் இருக்கும் வால்வுகள் சரியாக மூடப்படாமல் ஒரு சில இடங்களில் தண்ணீர் கசிந்த வண்ணம் இருந்து வருகிறது. மேலும் ஒரு சிலர் தாங்களும் அந்த தண்ணீரைத்தான் அருந்துகிறோம் என்று அறியாமல் அந்த தொட்டியின் மீது துணி துவைப்பது, குளிப்பது என்று முறைகேடாக தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை. 

குடிநீர் குழாயில் உடைப்பு 
திண்டுக்கல்- திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இந்த குடிநீர் சாலையில் தேங்கி நிற்பதால் சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளன இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாயை சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.

கழிவுகளால் துர்நாற்றம் 
திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு வடக்கு ஆண்டார் வீதி, கீழாண்டார் வீதி,  பிடாரி கோவில் சந்து இணையும் திருப்பத்தில் சாலையோரத்தில் பெரிய அளவிலான கல் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து தூர்வாரப்பட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
சுவாமிநாதன், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி காட்டூர் பகுதி எல்.ஐ.சி. நகர், பிரியங்கா நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் செல்ல முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், எல்.ஐ.சி.நகர், திருச்சி. 

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா? 
திருச்சியிலிருந்து முசிறி மற்றும் சேர்குடி வழியாக மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் வரை அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேட்டுப்பாளையம், திருச்சி. 


Next Story