சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
தொடர்ந்து அதிகாலை 5.43 மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. 9-ம் திருநாளான வருகிற15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறும். விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story