விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க காலதாமதம் செய்ததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க காலதாமதம் செய்ததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 8 April 2022 5:24 PM IST (Updated: 8 April 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க காலதாமதம் செய்ததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க காலதாமதம் செய்ததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. 

கண்டக்டர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வாரண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 

சிவக்குமார் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியாற்றி வந்தார். மேலும் அவர் வாரண்டஹள்ளி பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். 

கடந்த 2010- ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி அவர் பெட்டி கடைக்கு பொருட்கள் வாங்க பாலகோடுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து பொருட்களை வாங்கி விட்டு வீடு திரும்புவதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்தார். 

பஸ்சின் பின்பக்க படியின் பயணம் செய்யும்போது, டிரைவர் வேகமாகவும் ஓட்டியதால் சிவக்குமார் பஸ்சில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். 

இழப்பீடு

இதுகுறித்து தீபா பாலகோடு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் தீபா, மாமியார் மற்றும் குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பெரியகோளாப்பாடி பகுதியில் வசித்து வருகிறார். 

மேலும் தீபா, கணவரின் இறப்பிற்கு உரிய இழப்பீடு பெற்று தரக்கோரி திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்துக்களை கையாளும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.19 லட்சத்து 92 ஆயிரத்து 767 இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். 

இழப்பீடு தொகையை போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க கால தாமதம் செய்து வந்ததால் சிறப்பு நீதிமன்றம் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. 

அரசு பஸ் ஜப்தி

இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு இன்று வந்தனர். 

அப்போது சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். 

இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story