மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
ஆரணி அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
ஆரணி
மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்சில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளியுடன் செல்லும் உதவியாளருக்கு அரசு பஸ்சில் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல் ெரயிலில் பயணம் செய்ய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்டர்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்த அடையாள அட்டையை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
அதன்படி ஆரணி அரசு மருத்துவமனையில் அடையாள அட்டையை புதுப்பிக்க மாற்றுத்திறனாளிகள் பலர் வந்தபோது, அங்குள்ள டாக்டர்கள் தினமும் 10 பேர் மட்டுமே வர வேண்டும், எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனை முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் மாற்றுத்திறனாளி நிர்வாகிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் க.பெருமாள், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனைவருக்கும் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அரை மணி நேரம் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.
---
Related Tags :
Next Story