ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணையை பயோடீசல் தயாரிப்புக்கு விற்று விட வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல், பயோடீசல் தயாரிப்புக்கு விற்று விட வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல், பயோடீசல் தயாரிப்புக்கு விற்று விட வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சமையல் எண்ணெய்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் உத்திரவின் படி ஓட்டல்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. அதனை பயோடீசல் தயாரிப்புக்கு விலைக்கு விற்றுவிட வேண்டும். ஆனால், பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தி உணவு தயாரித்தாலோ அல்லது டீக்கடைகள், வடைக் கடைகள், சிக்கன் கடைகள் போன்றவற்றிற்கு விற்பனை செய்தாலோ அல்லது சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பண்டமாற்று முறையில் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட விற்பனை செய்த கடைகளும், அதனை வாங்கிப் பயன்படுத்தும் கடைகளும், சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களும் மூடப்படும்.
நடவடிக்கை
எனவே, சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்தும் வணிகர்கள் ஒரு நாளைக்கு 50 லிட்டருக்கு மேல் பயன்படுத்தும் உணவு தயாரிப்பாளர்கள் உரிய படிவத்தின்படி பதிவேடு பராமரிக்க வேண்டும். சமையல் எண்ணெயைப் பயன்படுத்தும் அனைத்து உணவு வியாபாரிகளும் சமையல் எண்ணெய் கொள்முதல் மற்றும் பயன்பாடு குறித்த பில்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். சமையல் எண்ணெயைப் பயன்படுத்தும் அனைத்து உணவு வியாபாரிகளும் சமையல் எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்திய பின்னர் குளிர வைத்துவிட்டால் அந்த எண்ணெயைத் திரும்ப சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. அதை ஒருமுறை பயன்படுத்தி எண்ணெயாகக் கருதி தனியாக ஒரு கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும். வாணலியில் கொதித்துக் கொண்டிருக்கும் போது அல்லது சூடாக இருக்கும் போது புதிய சமையல் எண்ணெயை சேர்க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு உரிய பில்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கோ அல்லது தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட வேறு வகையான உணவு வியாபாரிகளுக்கோ வழங்கக்கூடாது. மீறினால், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை விற்பனை செய்த கடையை மூடவும், அதை கொள்முதல் செய்து பயன்படுத்தும் வணிகர்களின் கடையை அல்லது சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலையை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை விற்பனை செய்த உணவு வணிகரின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story