திண்டுக்கல்லில் பட்டப்பகலில் துணிகர சம்பவம் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்து திருடிய வாலிபர்


திண்டுக்கல்லில் பட்டப்பகலில் துணிகர சம்பவம் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்து திருடிய வாலிபர்
x
தினத்தந்தி 8 April 2022 8:13 PM IST (Updated: 8 April 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்து திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

மர்ம நபர் ஓட்டம் 

திண்டுக்கல் மென்டோன்சா காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். ஆட்டோ டிரைவர். இவர் இன்றுகாலை 9 மணிக்கு தனது ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் திடீரென ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். அதை பார்த்த அய்யப்பன், அவரிடம் விசாரிக்க ஆட்டோவை நோக்கி சென்றார். உடனே மர்மநபர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அய்யப்பன், மர்ம நபரை பிடிக்க துரத்தினார். ஆனால் அய்யப்பனிடம் சிக்காமல் இருக்க அந்த மர்மநபர் தெருத்தெருவாக புகுந்து ஓடினார். சுமார் 1 கி.மீ. தூரம் துரத்தியும் மர்ம நபர் சிக்காமல் தப்பிவிட்டார். எனவே ஏமாற்றத்துடன் திரும்பி வந்த அய்யப்பன், தனது ஆட்டோவை சோதனை செய்தார். அதில் ஆட்டோவில் எதுவும் திருடு போகவில்லை என்பது உறுதியானது.

வீடு புகுந்து திருட்டு 
ஆனால் ஆட்டோவின் அருகில் பெண்ணின் கைப்பை ஒன்று திறந்த நிலையில் கிடந்தது. அதற்குள் ஆதார் அட்டை, சிறிய டைரி உள்ளிட்டவை இருந்தன. அது மர்ம நபர் வீசியதாக இருக்கலாம் என்பதால், ஆதார் அட்டையை எடுத்து அய்யப்பன் பார்த்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவரின் முகவரி இருந்தது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்து விசாரித்தார். அப்போது சிறிது நேரத்துக்கு முன்பு மர்ம நபர், வீடுபுகுந்து கவிதாவின் கைப்பையை திருடியது தெரியவந்தது. கவிதா காலையில் வழக்கம் போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கதவு திறந்து கிடந்ததால் மர்ம நபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து, கவிதாவுக்கு தெரியாமல் கைப்பையை திருடி சென்றுள்ளார்.
மேலும் அந்த கைப்பையில் ரூ.6 ஆயிரத்து 500 வைத்து இருந்ததாக அவர் தெரிவித்தார். அந்த பணத்தை எடுத்து விட்டு பையை ஆட்டோவின் அருகே மர்ம நபர் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்து வாலிபர் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story