குற்ற சம்பவங்களை தடுக்க 210 இடங்களில் கேமராக்கள்


குற்ற சம்பவங்களை தடுக்க 210 இடங்களில் கேமராக்கள்
x
தினத்தந்தி 8 April 2022 8:21 PM IST (Updated: 8 April 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியதால் குற்ற சம்பவங்களை தடுக்க 210 இடங்களில் போலீசாருடன் இணைந்து வியாபாரிகள் கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

ஊட்டி

ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியதால் குற்ற சம்பவங்களை தடுக்க 210 இடங்களில் போலீசாருடன் இணைந்து வியாபாரிகள் கேமராக்களை பொருத்தி உள்ளனர். 

கோடை சீசன்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியானது, சிறந்த கோடை வாசஸ்தலமாகவும், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இங்கு கோடை சீசன் தொடங்கி உள்ளதால் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.

இந்த கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் சமீப காலமாக நடந்து வருகிறது.  இதை தவிர்க்க அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தினார். இதை ஏற்று ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகள் தாமாக முன்வந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருகின்றனர். 

600 கேமராக்கள்

அதன்படி ஊட்டி நகரில் 210 இடங்களில் 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களை வியாபாரிகள் பொருத்தி வருகின்றனர். 

 இந்தநிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு சிறு வியாபாரிகள் ஒன்றிணைந்து அமைத்த 4 கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் உதவி மையத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது. இதனை ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் திறந்து வைத்து, அதில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டார். சுற்றுலா பயணிகள் கூட்டம் கூடும் பகுதிகள், சந்திப்பு இடங்களில் காட்சிகள் பதிவாகும் வகையில் கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒரு மாதம் வரை...

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கூறியதாவது:-
ஊட்டி நகரில் குற்ற சம்பங்களை தடுக்க 600 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 

கோடை சீசனுக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை கண்காணிக்கவும், கடைகளில் குற்ற சம்பவங்கள் நடந்தால் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவியாக இருக்கும். 600 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அருகே உள்ள கடைகளில் பதிவு செய்யப்படுகிறது. ஒரு மாதம் வரை காட்சிகள் பதிவாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story