நகராட்சி ஆணையாளரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை


நகராட்சி ஆணையாளரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை
x

கவுன்சிலருக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நகராட்சி ஆணையாளரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கூடலூர்

கவுன்சிலருக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நகராட்சி ஆணையாளரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கவுன்சிலருக்கு நோட்டீஸ்

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 9-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக எச்.சையத் அனூப்கான், தி.மு.க. வேட்பாளராக மு.பாண்டியராஜ் போட்டியிட்டனர். பின்னர் நடந்த தேர்தலில் எச்.சையத் அனூப்கான் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் மு.பாண்டியராஜ், நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வெற்றி பெற்ற எச்.சையத் அனூப்கான், தவறான தகவல் அளித்து தேர்தலில் போட்டியிட்டதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில், தகுதி நீக்கம் ஏன் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கம் கேட்டு கவுன்சிலர் எச்.சையத் அனூப்கானுக்கு, ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

ஐகோர்ட்டில் மனு

இதையடுத்து கவுன்சிலர் எச்.சையத் அனூப்கான், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எனது சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்தில் எனக்கு பங்கு உள்ளதாக நான் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றுக்கூறி அதை நிராகரிக்கக்கோரி தி.மு.க. வேட்பாளர் மு.பாண்டியராஜ் ஆட்சேபனை தெரிவித்தார். மாநில தேர்தல் ஆணையம் விசாரித்து, அந்த கோரிக்கையை நிராகரித்தது. 

தற்போது அதே குற்றச்சாட்டுடன் அவர் அளித்த புகாரின்பேரில் ஆணையாளர் எனக்கு கடந்த மாதம் 29-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார். கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவரின் தகுதி குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆனால் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நகராட்சி ஆணையாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இடைக்கால தடை

இந்த மனுவை, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் அடுது்த 2 வாரங்களில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story