தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் புறக்கணிப்பால் 30 நிமிடத்தில் முடிந்த முதல் கூட்டம்


தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் புறக்கணிப்பால் 30 நிமிடத்தில் முடிந்த முதல் கூட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 8:54 PM IST (Updated: 8 April 2022 8:54 PM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் முதல் கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது.

தேனி: 


தேனி அல்லிநகரம் நகராட்சி
தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இந்த நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க.வை சேர்ந்த 10-வது வார்டு கவுன்சிலர் ரேணுப்பிரியா தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக ரேணுப்பிரியாவின் கணவரும், நகர தி.மு.க. பொறுப்பாளருமான பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 31-ந்தேதி நடக்க இருந்த நகராட்சி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலை தி.மு.க., காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில், புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்ற பிறகு முதல் நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமை தாங்கினார்.

புறக்கணிப்பு-வெளிநடப்பு
நகராட்சியில் மொத்தம் 33 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், தி.மு.க. கவுன்சிலர்கள் 8 பேர், அ.ம.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் என தலைவர் உள்பட 11 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். தி.மு.க. கவுன்சிலர்களில் 10 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 2 பேர், பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர், சுயேச்சைகள் 2 பேர் என 22 கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தொடங்கி தீர்மானங்கள் வாசித்துக் கொண்டு இருந்தபோது, சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.ம.மு.க. கவுன்சிலர்கள் ஜெயா, செல்வி ஆகிய 2 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தலைவர் மற்றும் 8 கவுன்சிலர்களுடன் கூட்டம் தொடர்ந்து நடந்தது.

சொத்து வரி உயர்வு
இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்களின் ஆதரவோடு, தேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைப்பது, சொத்து வரி உயர்வு, கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கான விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. முதல் கூட்டமே விவாதங்கள் ஏதுமின்றி அரை மணி நேரத்தில் முடிந்தது.


இந்த கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தரப்பில் கேட்டபோது, "தேனியில் கருணாநிதிக்கு சிலை அமைப்பது, சொத்து வரி உயர்வு போன்ற தீர்மானப் பொருளுக்கு ஆட்சேபனை தெரிவித்து கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தோம்" என்றனர். 

கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் கேட்டபோது, "காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய நகராட்சி தலைவர் பதவியில் தி.மு.க.வை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கருதியதால் கட்சி நிர்வாகிகள் வழிகாட்டுதல் இன்றி கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று புறக்கணிப்பு செய்யப்பட்டது" என்றனர்.

Next Story