பெங்களூரு கரக ஊர்வலம் வழக்கம்போல் நடைபெறும்; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி
பெங்களூரு கரக ஊர்வலம் வழக்கம்போல் முந்தைய வழிமுறைகளின்படியே நடைபெறும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பெங்களூரு:
வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கரகம் செல்லக்கூடாது
பெங்களூரு கரக விழா தொடங்கியுள்ளது. இந்த விழா எப்போதும் போல் தற்போதும் நடைபெறும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இது தான் அரசின் நிலைப்பாடு. கரக விழாவுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கெம்பேகவுடா காலத்தில் திகழரபேட்டை, பலேபேட்டை, சிக்பேட்டை பகுதிகளில் மதசார்பின்மை அடிப்படையில் நடைபெற்று வந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு நடந்து வருகிறது. இதில் மசூதி இருக்கும் பகுதியில் கரகம் செல்லக்கூடாது என்று சிலர் பிரச்சினை கிளப்பியுள்ளனர். இதற்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை.
மத நல்லிணக்கம்
கரக விழா நடைபெறும்போது, முஸ்லிம் தர்கா நிர்வாகம் ஆண்டுதோறும் மசூதிக்கு வரும்படி அழைப்பு விடுக்கும். அதே போல் இந்த ஆண்டும் அந்த தர்கா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த மாற்றமும் இல்லை. அமைதி, நல்லிணக்கத்துடன் நல்ல முறையில் விழாவை நடத்த வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
இதில் யாரும் தேவையின்றி குழப்பத்தை விளைவிக்க கூடாது. கரகம் என்றாலே அமைதி, மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றது. முந்தைய வழிமுறைகள்படியே வழக்கம்போல் பெங்களூரு கரக ஊர்வலம் நடைபெறும். இதுகுறித்து விழா குழுவினருக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளோம்.
பெங்களூருவில் சாலைகளை அமைப்பது, மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைப்பது, மழைநீர் கால்வாய்களை சரிசெய்வது போன்ற பணிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்னும் 2 மாதத்தில் தொடங்கி வைக்க உள்ளார். பெங்களூருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
Related Tags :
Next Story