ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் துமகூரு மாவட்டம் சிராவை சேர்ந்த ஹரீஷ் நாயக்(வயது 30) என்று தெரிந்தது. இவர், எலெக்ட்ரானிக் சிட்டி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம். மையங்கள் முன்பாக சுற்றித்திரிவார். அப்போது பணம் எடுக்க வரும் பெண்கள், முதியவர்களிடம் உதவி செய்வதாக கூறி, அவர்களிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை பெற்று மோசடி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
மேலும் முதியவர்களிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கி, பணம் எடுத்து கொண்டு, பணம் வரவில்லை என்று கூறி ஹரீஷ் நாயக் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1¾ லட்சம் ரொக்கம், 4 ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story