மும்பையை யூனியன் பிரதேசமாக்க பா.ஜனதா சதி- சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
மும்பையை யூனியன் பிரதேசமாக்க பா.ஜனதா சதி திட்டம் தீட்டுவதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை,
மும்பையை யூனியன் பிரதேசமாக்க பா.ஜனதா சதி திட்டம் தீட்டுவதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.
சொத்துக்கள் முடக்கம்
சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. மத்திய அரசு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகளுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். இதேபோல பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட பல சிவசேனா தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது.
பா.ஜனதா சதி
இந்தநிலையில் பா.ஜனதா மற்றும் கிரித் சோமையா மீது சஞ்சய் ராவத் எம்.பி. பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முன்னாள் எம்.பி. கிரித் சோமையா மற்றும் பா.ஜனதா தலைவர்கள், கட்டுமான அதிபர்கள், தொழில் அதிபர்கள் மும்பையை யூனியன் பிரதேசமாக்கும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை யூனியன் பிரதேசமாக்குவது தொடர்பான திட்டத்தை மத்திய உள்துறையிடம் இந்த கும்பல் சமீபத்தில் காட்டி இருக்கிறது. இதற்காக பல கூட்டங்கள் நடந்து உள்ளன. நிதி திரட்டப்பட்டுள்ளது.
ஆதாரம் உள்ளது
இந்த சதி கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது. முழு பொறுப்புடன் தான் இதை நான் கூறுகிறேன். எனது குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இந்த சதி குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும் தெரியும். அடுத்த சில மாதங்களில் கிரித் சோமையா கும்பல் இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் முறையிட உள்ளனர். அப்போது அவர்கள் மராட்டிய தலைநகரமான மும்பையில் மராட்டியர்கள் எண்ணிக்கை சரிந்து வருவதால் அதை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று கூற உள்ளனர். கிரித் சோமையா பள்ளிகளில் மராத்தியை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றவர் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவாியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கர்நாடக எல்லையோரம் மராத்தியர்கள் அதிகம் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என கூறியிருந்தார். அதற்கு கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி மும்பையை மத்திய அரசு யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story