திருப்பூரில் ராஜஸ்தான் பெண்ணை காதலித்து கரம் பிடித்த வாலிபர்
திருப்பூரில் ராஜஸ்தான் பெண்ணை காதலித்து கரம் பிடித்த வாலிபர்
திருப்பூர்,
திருப்பூரில் ராஜஸ்தான் பெண்ணை காதலித்து கரம் பிடித்த வாலிபர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெண் வீட்டினர் போலீஸ் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராஜஸ்தானை சேர்ந்தவர்
ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த நாதராம் என்பவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவருடைய மகள் சோபு குமாரி (வயது 19). 8-ம் வகுப்பு வரை படித்த இவர் தனது தந்தையின் கடைக்கு வந்து வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை கடையில் இருந்த சோபு குமாரியை காணவில்லை. உடனடியாக இது குறித்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபுகுமாரியை தேடி வந்தனர்.
செல்போன் ஷோரூம் ஊழியர்
அப்போது அவருடைய செல்போன் எண்ணுக்கு அடிக்கடி வந்த அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த முரளீதரன் (27) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. அவர் சோபுகுமாரியின் எலக்ட்ரிக்கல் கடைக்கு அருகே உள்ள செல்போன் ஷோரூமில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் முரளீதரனும், சோபுகுமாரியும் நேற்று முன்தினம் மாலை திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், சோபுகுமாரின் பெற்றோரால் தங்களின் உயிருக்கு ஆபத்து என்றும் போலீசில் தெரிவித்தனர்.
காதலனுடன் அனுப்பி வைப்பு
உடனே காதல்ஜோடியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சோபுகுமாரியின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு வடக்கு மகளிர் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். சோபுகுமாரியை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு போலீசாரிடம் கெஞ்சி மன்றாடினார்கள். ஆனால் இருவரும் 18 வயதை கடந்து மேஜர் என்பதால் அவர்கள் முடிவு படியே செயல்பட முடியும் என்று போலீசார் தெளிவாக எடுத்து கூறினார்கள்.
ஆனாலும் சோபுகுமாரியின் உறவினர்கள் முரளீதரனை ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்றோர், உறவினர்கள் கெஞ்சி கேட்டபின்னரும் சோபுகுமாரி தனது காதலன் முரளீதரனுடன் தான் செல்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன். அவர்களுடன் சென்றால் உயிருக்கு ஆபத்து என்று போலீசாரிடம் தெரிவித்து விட்டார். இதைத்தொடர்ந்து இரு வீட்டாரிடமும் அறிவுரை கூறிய போலீசார், சோபுகுமாரி விருப்பப்படி அவருடைய காதலன் முரளீதரனுடன் அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இருப்பினும் சோபுகுமாரின் உறவினர்கள் போலீஸ் நிலைய வளாகத்திலேயே நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்தனர். அதன்பிறகு போலீசார் அங்கு குவிந்து இருந்த அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். திருமணம் செய்து கொண்ட பிறகு சோபுகுமாரி, முரளீதரன் இருவரும், உறவினர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
Related Tags :
Next Story