திருப்பூரில் உள்ள சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணி குறைபாட்டால் குடிநீர் சுவை மாறி வருகிறது


திருப்பூரில் உள்ள சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணி குறைபாட்டால் குடிநீர் சுவை மாறி வருகிறது
x
தினத்தந்தி 8 April 2022 10:51 PM IST (Updated: 8 April 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணி குறைபாட்டால் குடிநீர் சுவை மாறி வருகிறது

திருப்பூர்,
திருப்பூரில் உள்ள சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணி குறைபாட்டால் குடிநீர் சுவை மாறி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சுத்திகரிப்பு மையம்
திருப்பூர் மாநகரில் வினியோகிக்கப்படும் குடிநீரானது பெரும்பாலான இடங்களில் சுவையாக இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாநகரப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. வாலிபாளையம், பெரியார் நகர், கே.பி.என். காலனி, சூசையாபுரம், வெங்கடேஸ்வரா நகர், மூகாம்பிகை நகர், டூம்லைட் மைதானம், பி.கே.ஆர்.காலனி, கே.வி.ஆர் நகர் மேற்கு, அய்யன் நகர், செல்லம் நகர், புதுக்காடு, கரட்டாங்காடு, பாளையக்காடு உள்பட மாநகரின் மேலும் சில இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.  அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீரை நன்னீராக மாற்றும் வகையில் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுத்திகரிக்கப்படும் குடிநீரானது நல்ல சுவையுடன் பொதுமக்களுக்கு இலவசமாகவினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஒவ்வொரு சுத்திகரிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பிடிப்பதற்கான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டை சுத்திகரிப்பு மையத்தில் உள்ள எந்திரத்தில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள குழாயில்சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும். இதன் மூலம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு குடம் குடிநீர் கிடைக்கும். கார்டை ஒரு முறை ஸ்கேன் செய்து விட்டால் 24 மணி நேரத்திற்கு பின்னர் தான் அந்த கார்டை பயன்படுத்த முடியும். அந்த வகையில் எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே குடிநீர் பிடிக்க முடியும். இவ்வாறு குடிநீர் வினியோகம் நடந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான சுத்திகரிப்பு மையங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக சுத்திகரிப்பு எந்திரங்களில் பில்டர் மாற்றுதல், ரசாயனம் மாற்றுதல் உள்ளிட்டவை சரியான முறையில் நடைபெறவில்லை என தெரிவிக்கின்றனர்.
சுவை மாறிய குடிநீர்
இதன் காரணமாக சில இடங்களில் ஆழ்குழாயிலிருந்து வரும் குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வருவதால் குடிநீரின் சுவை மாறியுள்ளதாகவும், நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் கேன் குடிநீரை எல்லோராலும் வாங்கி பயன்படுத்த முடியாது. 
எனவே இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த குடிநீர் பொதுமக்களுக்கு நல்ல முறையில் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், பராமரிப்பில் குறைபாடு ஏற்படும் போதுசுத்திகரிப்பு எந்திரங்களும் விரைவில் பழுதாகும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சுத்திகரிப்பு மையங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?. 
தற்போது வெயில் காலமாக இருப்பதால் குடிநீரின் ேதவை மிகவும் அதிகமாக இருக்கும். எனவே நல்லதொரு திட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்களா?

Next Story