மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 8 April 2022 11:25 PM IST (Updated: 8 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

விருதுநகர், 
கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 
சிவகாசி 
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் வழக்கம் போல் வாட்டி வதைத்தது. இதையடுத்து மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்த காற்று, இடியுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. 
 2 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு பின்னர் தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாத்தூர் 
சாத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை 4.45 மணி வரை  பெய்தது. இதனால் மதுரை பஸ் நிறுத்தம், பஸ் நிலையம், தாலுகா அலுவலகம் செல்லும் முக்கிய சாலை, நான்கு வழிச்சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
 சாத்தூர் நகராட்சி பணியாளர்கள் வாறுகால் அடைப்புகளை சரி செய்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சூறாவளி காற்று 
 தாயில்பட்டி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம், வன மூர்த்தி லிங்கபுரம், சத்திரப்பட்டி, சல்வார்பட்டி, சுப்ரமணியபுரம், வெற்றிலையூரணி, சேதுராமலிங்கபுரம், பூசாரி நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. 
இதனால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு பட்டாசு தொழிலாளர்கள் வாகனங்கள் மூலம் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. விஜயரெங்காபுரம் ஊராட்சியில் சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்தன. 
தாயில்பட்டி மெயின் ரோட்டில் கடைகளில் முன்புறம் இருந்த விளம்பர பலகைகள் சூறாவளி காற்றினால் ரோட்டில் விழுந்தன. 
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஆத்திபட்டி, காந்திநகர், புளியம்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. 
இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீரோடு கலந்து சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆலங்குளம் 
 ஆலங்குளம், கொங்கன்குளம், மேல பழையாபுரம், தொம்பகுளம், மேட்டூர், காளவாசல், கரிசல்குளம், சீவலப்பேரி, கண்மாய்பட்டி, வலையபட்டி, அருணாசலபுரம், கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், கோபாலபுரம், புளியடிப்பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, உப்புபட்டி, மாதாங்கோவில்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், கண்டியாபுரம்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
 இந்த மழை பருத்திக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 

Related Tags :
Next Story