மழையில் நனையும் நெல் மூடைகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லாததால் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள நெல்மூடைகள் மழையில் நனைந்து நெல்மணி மூடையிலேயே முளைக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லாததால் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள நெல்மூடைகள் மழையில் நனைந்து நெல்மணி மூடையிலேயே முளைக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
அனுமதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததாலும் வைகை அணையில் இருந்து தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பின. இதுதவிர தொடர் மழையால் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் நன்றாக இருந்தது. குறிப்பாக நெல் விவசாயம் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதிக பாதிப்பு இல்லாமல் விளைந்து விவசாயிகளுக்கு கைகொடுத்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகஅளவில் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் 84 நெல்கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் கொள்முதல் செய்ய இடம் இல்லாத நிலை போன்றவற்றால் அறிவித்தபடி கொள்முதல் செய்ய முடியவில்லை. இதுதவிர, மாவட்டம் முழுவதும் கொள்முதல் செய்த நெல்மூடைகள் பாதுகாத்து வைக்க இடம் இல்லாததால் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பாதுகாக்கப்பட்டு வந்தது.
அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் தேவைக் காக இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராமநாதபுரம் மாவட் டத்தில் இருந்து கொள்முதல் செய்த நெல்மூடைகள் இங்கேயே தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. நன்றாக விளைந்தும் அதனை விற்று கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் கொள் முதல் செய்த நெல்மூடைகளையும், கொள்முதல் செய்ய கொண்டுவந்துள்ள நெல்மூடைகளும் அந்தந்த பகுதிகளிலேயே சாலைகளில் மூடைமூடையாக அடுக்கி வைத்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் நெல்மூடைகள் பாதிக்கப்பட்டு மூடை களிலேயே முளைத்துவிடும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதுதவிர, கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்து அடுக்கி வைக்கப்பட்டு உள்ள மூடைகளுக்கு விவசாயிகளே பொறுப்பு என்பதால் அனைவரும் மழையில் நனைவதை கண்டு கலங்கி வருகின்றனர்.
சேமிப்பு கிடங்கு
ஒரு சில இடங்களில் நெல்மணிகள் முளைத்து வெளியில் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரியிடம் கேட்டபோது கூறியதாவது:- மாவட்டத்தில் நாங்கள் 44 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்து உள்ளோம். மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல் மூடைகளை வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லை. இதனால் இந்த நெல்மூடைகள் பல பகுதிகளில் கொண்டு செல்ல வழி இல்லாததால் சமுதாய கூடம் மற்றும் சாலை ஓரங்களில் அடுக்கி வைத்துள்ளோம். இவை அனைத்தும் தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளோம். தினமும் இதற்கென அமைக்கப்பட்டு உள்ள விவசாயிகள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்காத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நெல்கொள்முதல் செய்தவர்களுக்கு வழங்க ரூ.5 கோடி நிதி உள்ளது. இந்த நிதி ஒருவார காலத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூடைகள் விரைவில் முளைத்துவிடும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story