நாமகிரிப்பேட்டை அருகே பெண் கொன்று புதைப்பு? உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
நாமகிரிப்பேட்டை அருகே பெண் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ராசிபுரம்:
பெண் திடீர் சாவு
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (51). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமி, வெங்கடாசலத்தை பிரிந்து தனது குழந்தைகளுடன் சென்று விட்டார்.
இதனிடையே வெங்கடாசலத்துக்கு திருச்சியை சேர்ந்த சாதனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் 2 பேரும் ஆவாரங்காடு பகுதியில் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சாதனா திடீரென இறந்தார். இதையடுத்து வெங்கடாசலம், சாதனா உடலை வீட்டின் அருகே குழி தோண்டி அடக்கம் செய்தார்.
கொலையா?
இந்தநிலையில் சாதனா மரணத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனை அறிந்த நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடாசலத்திடம் விசாரித்தனர்.
இதையடுத்து நேற்று சாதனா உடல் தோண்டி எடுக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் அருண் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சாதனா கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கையாக மரணம் அடைந்தாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு
மேலும் தொடர்ந்து வெங்கடாசலத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமகிரிப்பேட்டை அருகே பெண் கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் காரணமாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story