பாதைக்கான நிலத்தை வகை மாற்றிய வழக்கில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜர்


பாதைக்கான நிலத்தை வகை மாற்றிய  வழக்கில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜர்
x
தினத்தந்தி 9 April 2022 1:07 AM IST (Updated: 9 April 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

பாதைக்கான நிலத்தை வகை மாற்றிய வழக்கில் மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் ஆஜராகி ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தார். அப்போது, “ஆக்கிரமிப்பாளர்களே நிலத்தை நிரந்தரமாக பயன்படுத்த கொடுப்பீர்களா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை, 

பாதைக்கான நிலத்தை வகை மாற்றிய வழக்கில் மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் ஆஜராகி ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தார். அப்போது, “ஆக்கிரமிப்பாளர்களே நிலத்தை நிரந்தரமாக பயன்படுத்த கொடுப்பீர்களா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நிலம் வகை மாற்றம்

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த் முத்துகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டம் காளிகாப்பன் பகுதியில் பாதை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலை என வருவாய் ஆவணங்களில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து சிலர் குடியிருக்கின்றனர்.
இந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்க மாவட்ட கலெக்டர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலை (பாதை) என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை பிற பயன்பாட்டிற்கு வழங்க முடியாது. எனவே இந்தப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தடை விதித்து, அங்கு வசிப்பவர்களுக்கு வேறு பகுதியில் நிலம் வழங்கவும், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடும்படி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அதை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை நீடிக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிலத்தின் வகையை மாற்றி, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் செயல். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கலெக்டர் ஆஜர்

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் ஆஜராகி விளக்கம் அளித்தார். 
அப்போது நீதிபதிகள், "ஆக்கிரமித்த இடம் எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களே நிரந்தரமாக பயன்படுத்தும்படி அந்த இடத்தின் வகையை வரன்முறைப்படுத்திக் கொடுப்பீர்களா?” என கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கின் தற்போதையை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுங்கள் என கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story