அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 9 April 2022 1:16 AM IST (Updated: 9 April 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி கூட்டங்களில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆத்தூர்:-
சொத்து வரி உயர்வை கண்டித்து ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி கூட்டங்களில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவசர கூட்டம்
ஆத்தூர் நகராட்சியின் அவசர கூட்டம் தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கவிதா ஸ்ரீராம், ஆணையாளர் பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் வாசித்து முடிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர் உமாசங்கரி மோகன் பேசும் போது, ஏற்கனவே கொேரானா நோய் தொற்றால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்கள் இந்த வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார். இதைத்தொடர்ந்து அவருடன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க. கவுன்சிலர் பிரவீனா ராஜா பேசும் போது,  எந்தெந்த நேரங்களில் யாருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு தெரியும் என்றார்.   விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர் நாராயணன் பேசும் போது, கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரு மடங்கு வரி உயர்வு செய்தார். அப்போது அமைதியாக இருந்த அ.தி.மு.க. இப்போது வெளிநடப்பு செய்வது கண்டிக்கத்தக்கது என்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் ஜீவா, ஸ்டாலின், ராஜேஷ்குமார், ஷேக் தாவூத், சம்பத், பாஸ்கர் உள்பட 31 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நரசிங்கபுரம் நகராட்சி
இதே போல நரசிங்கபுரம் நகராட்சி அவசர கூட்டம் தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது.  துணைத்தலைவர் தர்மராஜ், ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியும் சொத்து வரி உயர்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை கேட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் கோபி மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் ஜோதி பெருமாள் பேசும் போது தூய்மை பணியாளர்களுக்கு போதுமான உபகரணங்களை வழங்க வேண்டும் என்றார். இதே போல மற்ற கவுன்சிலர்களும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை விடுத்தனர். அதனை உடனடியாக நிறைவேற்றுவதாக நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் கூறினர்.

Next Story